தூத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாவது படை வீடாக அறியப்படும் திருச்செந்தூர் ஸ்தல வரலாறு குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
தமிழ்க்கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமானுக்கு ஆறு படை வீடுகள் உள்ளன நாம் அறிந்த ஒன்றே. குன்றிருக்கும் இடங்களில் எல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கேற்ப, இந்த அறுபடை வீடுகளில் 5 படை வீடுகள் மலைகளின் மீதே அமைந்துள்ளன.
ஒரே ஒரு படை வீடு மட்டும் கடலோரத்தில் அமைந்திருக்கிறது. அதுவே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலாக உள்ளது. இந்த கோயில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

திருச்செந்தூர் ஸ்தல வரலாறு
சூரபத்மன் என்ற அசுரனை வதம் செய்ய திருச்செந்தூர் வந்த முருகப்பெருமான், அங்கே தங்கி வியூகம் வகுத்தார். பிறகு வீரபாகுவை சூரபத்மனுக்கு தூது அனுப்பினார். அதன்பிறகே படையெடுத்து வெற்றி கண்டார் முருகன்.
இதனால் முருகன் செயந்திநாதர் என்று அழைக்கப்பட்டார். இதனால் இந்த ஊரின் பெயர் திருச்செயந்திபுரம் என்று அழைக்கப்பட்டு வந்தது. பிறகு மறுவி திருச்செந்தூர் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊருக்கு திருச்சீரலைவாய், அலைவாய்ச்சேறல், வெற்றி நகர், சிந்துபுரம், வியாலச்சேத்திரம் என்ற பல்வேறு பெயர்களால் போற்றப்படுகிறது.

போரில் வெற்றி கண்ட முருகன், சூரபத்மனை தனது கொடியாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுள் ஆட்கொண்டு வைத்துக்கொண்டார். சங்க இலக்கியங்களிலும் திருச்செந்தூர் இடம்பெற்றுள்ளது.
குமரகுருபர சுவாமிகளுக்கு சிறு வயதில் பேச்சு வராத போது, முருகன் அருளால் அவர் பேசத்தொடங்கியே, கந்தர் கலிவெண்பாவை இயற்றினார் என்றும் நம்பப்படுகிறது.
கோயிலின் அமைப்பு

ஓம் என்ற வடிவில் திருச்செந்தூர் கோயில் அமைந்துள்ளது. 157 உயர வெண்ணிற கோபுரம் காண்போர ஆட்கொள்கிறது. கோயிலின் கோபுரம் மொத்தம் 9 தளங்களைக் கொண்டிருகிறது. இதனைக் குறிக்கும் வகையில் கோபுர உச்சியில் 9 கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இக்கோயிலில் சண்முக விலாசம் என்ற பெயரில் மண்டபம் உள்ளது. இது 124 தூண்களுடன் 120 அடி உயரம் கொண்டதாக அமைந்துள்ளது.

திருச்செந்தூரில் முருகன் சண்முகர், பாலசுப்பிரமணிய சுவாமி என்ற இரு தோற்றங்களில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சூரனை வெற்றிகொண்ட பின் சிவனுக்கு தாமரை மலரால் பூஜை செய்தார் என்பதைக் குறிக்கும் வகையில் இன்றும் முருகன் கையில் தாமரைப் பூ இருக்கும்.
விவரங்கள்

திருச்செந்தூர் கோயிலில் வள்ளி குகை அமைந்துள்ளது . மேலும், 24 அடி ஆழத்தில் நாழிக்கிணறு அமைந்துள்ளது. பக்தர்கள் இங்கு நீரடிய பிறகு கடலில் குளிக்கச் செல்ல வேண்டும் என்ற வழக்கம் இங்கு உள்ளது.
மூலவருக்கு தினமும் கங்கா பூஜை செய்யப்படுகிறது. அதோடு, முருகப்பெருமானுக்கு உரிய விஷேச நாட்களிலும், கந்த சஷ்டி நாட்களிலும் இங்கு பொதுமக்கள் திரண்டு வழிபாடு நடத்துவார்கள்.

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நடை தினமும் காலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இரவு 9 மணி வரை நடை திறந்தே இருக்கும். அப்போது முருகனுக்கு தீபாராதனைகள், சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன.


